ஒரு தனிம அணுவொன்றின் கருவிற்கும் இலத்திரனைக் கொண்ட நிலையான ஈற்றோட்டு சக்தி மட்டத்திற்கும் இடையிலான தூரம் அணுவாரையாகும். அணுவின் உருவ அளவு அணுவாரையில் தங்கியுள்ளது. தனிம வரிசை அட்டவணையில் ஆவர்த்தனத்தில் உள்ள சாதாரண தனிமங்களுக்கு அணுவாரை இடமிருந்து வலப்பக்கம் செல்லும்போது குறைகின்றது. இதற்குக் காரணம் ஆவர்த்தனம் வழியே கருவேற்றம் கூடுவதால் கருக்கவர்ச்சி கூடுவதாகும். கூட்டத்தில் மேலிருந்து கீழே அணுவாரை கூடுகின்றது. கூட்டத்தின் வழியே இலத்திரன் சக்தி மட்டங்கள் கூடுவது இதற்குக்காரணம்.
அணுக்களின் ஆரத்தை அளக்க அணுக்கள் தனியாக இருத்தல் வேண்டும், ஆனால் பல நேரங்களில் அணுக்கள் பிற அணுக்களுடன் பிணைப்புண்டு இருக்கும். இதைத்தவிர கருவை எக்ஸ்-கதிர் கோணல் முறையால் இனம் கண்டாலும் ஈற்றோட்டு இலத்திரன் முகிலை இனங்காண்பது சாத்தியம் குறைவானது. இவ்வகையான காரணங்களால் அணுவாரையானது அளக்கப்படும் முறையின் அடிப்படையில், பின்வரும் பதங்கள் மூலம் அழைக்கப்படும்:பங்கீட்டு ஆரை
ஒரேவிதமான இரு அணுக்கள் பங்கீட்டு வலுப்பிணைப்பில் ஈடுபட்டிருக்கும் போது அவற்றின் கருக்களுக்கிடையிலான தூரத்தின் அரைவாசி பங்கீட்டு ஆரையாகும். இது வழமையாக பிக்கோ மீட்டர்களில் (pm) அல்லது ஆங்க்சுட்ரோமில் (Å) அளக்கப்படுகின்றது.
எடுத்துக்காட்டு: ஒரு L2 மூலக்கூறு
L2 மூலக்கூறு பங்கீட்டு வலுப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளது; இதன் கருக்களுக்கிடையான தூரம் (d1) 256 pm எக்சு-கதிர் பளிங்கு வரைவியல் முறைமூலம் (X-ray crystallography ) அளக்கப்படுகின்றது. இதன் பங்கீட்டு ஆரை 128pm ஆகும்.
வந்தர்வாலின் ஆரை
குறித்த மூலகம் (L2) ஒன்றின் இரு மூலக்கூறுகள் பிணைப்பில் இல்லாமல் மிக அருகருகே உள்ளபோது அந்த இரு மூலக்கூறுகளின் கருக்களுக்கு இடையிலான தூரத்தின் அரைவாசி வந்தர்வாலின் ஆரையாகும்.
உலோக ஆரை
உலோகப் பிணைப்பால் பிணைந்துள்ள உலோகமொன்றின் இரு அணுக்களின் கருக்களுக் கிடையிலான தூரத்தின் அரைமடங்காகும்.


