உடனடியான வலி, அழற்சி போக்கியாக அல்லது நீண்ட நாட்களாக இருந்துவரும் வலியைப் போக்குவதற்காக வழமையாகப் பயன்படுத்தப்படுகிறது. சில இவ்வகை மருந்துகளின் நீண்ட காலப் பயன்பாடு குடற்புற்று நோயின் தீவிரத்தைக் குறைக்கவள்ளது என்று அறியப்பட்டுள்ளது. (1) (2)
பின்வரும் நோய்களில் இவை பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன:
- முடக்குவாதம், கீல்வாதம் மற்றும் பல்வேறுவகையான வாதநோய்களால் ஏற்படும் அழற்சி, மூட்டு வலி.
- வலிமிகுவிடாய்
- தலைவலி மற்றும் மைக்ரைன்
- அறுவைச்சிகிச்சையின் பின்னர் ஏற்படும் வலி
- காய்ச்சல்
- சிறுநீரக வலிப்பிடிப்பு
அசுப்பிரினானது குருதிச் சிறுதட்டுக்கள் ஒருங்கிணைவதை நிறுத்துகிறது, இதனால் குருதிக்குழாய்களில் குருதி உறைவது தடுக்கப்படுகிறது, இதன் மூலம் சில இதயக்குழலிய நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
மருந்து இயக்கத் தாக்கியல்
பெரும்பான்மை இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் 3-5 வரையிலான pKa பெறுமானம் கொண்ட வலுவற்ற அமிலங்களாகும். இரைப்பையில் இருந்தும் குடலில் இருந்தும் நன்கு அகத்துறிஞ்சப்படுகின்றன, பின்னர் குருதிப்புரதங்களுடன் பிணைக்கப்பட்டு கல்லீரலில் வளர்சிதை மாற்றங்களுக்கு உள்ளாகின்றன, இறுதியில் செயலற்ற விளை பொருட்கள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன.