புரோசுடாகிளாண்டின் (prostaglandin) எனப்படும் வேதிப்பொருள் உடலில் அழற்சி, வலி, காய்ச்சல் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது; ஒரு செய்தி அனுப்பும் ஊடகம் போலத் தொழிற்படுகிறது. புரோசுடாகிளாண்டினின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்பட்ட வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் குறைக்கலாம்.
இந்த மருந்துகள் அடங்கிய கட்டுரையைப் பயன்படுத்தி உங்களுக்கோ அல்லது உங்கள் உறவினருக்கோ நண்பருக்கோ அல்லது எவரிற்கும் சிகிச்சை வழங்குதல் உகந்தது அல்ல! உங்களுக்கு அல்லது உங்களைச் சார்ந்தவருக்குச் சிகிச்சை தேவைப்படுமாயின் சிறந்த மருத்துவரை அணுகி அவர் ஆலோசனையின் பெயரிலேயே மருந்துகள் பயன்படுத்தல் வேண்டும்.
புரோசுடாகிளாண்டின் கொழுப்பமிலமான அரக்கிடோனிக் அமிலத்தில் இருந்து உருவாகுகின்றது, இந்த உருவாக்கத்தை ஊக்குவிக்கும் நொதியமாக சைக்கிளோஒக்சிசனேசு விளங்குகிறது, இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் இந்த நொதியத்தைத் தடுப்பதனால் புரோசுடாகிளாண்டின் உருவாகுதல் நிறுத்தப்படுகிறது, இதன் மூலம் அழற்சி, வலி, காய்ச்சல் என்பனவும் கட்டுப்படுத்தப்படுகிறது. சைக்கிளோஒக்சிசனேசு சமநொதியங்களாகக் காணப்படுகிறது; சைக்கிளோஒக்சிசனேசு – 1 (COX-1), சைக்கிளோஒக்சிசனேசு – 2 (COX-2), சைக்கிளோஒக்சிசனேசு – 3 (COX-3) என்பன அவையாகும். அநேகமான இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் மேற்கூறப்பட்ட நொதியங்களைத் தாக்குகிறது, அதேவேளை தெரிந்தெடுத்துத் தாக்கும் மருந்துகளும் (COX-2) உண்டு.
இந்த இயல் இயக்க முறையைப் பற்றி அசுப்பிரின் மூலம் விளக்கிய ஜோன் வேன் (1927-2004) இதற்காக நோபெல் பரிசைப் பெற்றார். பெரும்பான்மையான இயல் இயக்க முறையின் பகுதிகள் இன்னமும் தெளிவாக அறியப்படாமலேயே உள்ளன.