ஓர் ஊரில் ஒரு மாயவித்தைக்காரன் அவனது வேட்டைநாயுடன் வாழ்ந்து வந்தான்.
ஊர் ஊராக சென்று வித்தை காட்டுவது அவனது வழக்கம்.
ஒருமுறை, எப்பொழுதும் போல அவன் வித்தை காட்டி முடிந்து வீடு திரும்பும் பொழுது, ஒரு குட்டி குரங்கு தனது தாயுடன் மரம் விட்டு மரம் தாவிக்கொண்டு இருந்தது. வித்தைக் காரனை கண்டதும் குட்டி குரங்கு தன் கைப்பிடியை தவறவிட்டுவிட அது கீழே விழுந்து விட்டது. நன்றாக தாவத்தெரியாத அந்த சிறு குட்டியை வித்தைக்காரன் தனது வித்தை தொழிலுக்கு உதவும் என்று வீட்டிற்கு எடுத்துக் கொண்டு சென்றான். குரங்கும் தனது பிள்ளையை கொண்டு சென்ற வித்தைக்காரன் பின்னால் மரம் விட்டு மரம் தாவிய படி சென்றுகொண்டு இருந்தது.
வித்தைக்காரன் வீட்டினை அடைந்ததும் தனது வீட்டின் முற்றத்திலே ஒரு சிறிய பின்னல் வலை கூடை இரும்பால் செய்து அதனுள் குட்டிக் குரங்கை விட்டு வைத்தான். அவனது நாயையும் காவலிற்கு வைத்து விட்டான். குட்டி குரங்கிற்கும் நாயிற்க்கும் சேர்த்து வித்தைகள் சில கற்றுக் கொடுக்க தொடங்கினான். குட்டி அவனிடம் சில வேளைகளில் கஷ்டப்பட்டது. அதனை பார்த்த வேட்டை நாயிற்க்கு கவலை ஆக இருந்தது. தான் தான் அடிமையாக வாழ பழகி விட்டோம், பாவம் இதுவும் வந்து மாட்டிவிட்டதே என கவலைப் பட்டது.
வித்தைக்காரன் தனது மாயவித்தைக்கு செல்லும் போது குட்டி குரங்கிற்கு அழகான உடைகள் அணிவித்து கொண்டு கூட்டிச் செல்வான். குட்டி குரங்கின் தாய் ஒவ்வொரு நாளும் வந்து காத்திருந்து விட்டுச் செல்லும். ஆனால் அதனால் தனது குட்டியைக் காப்பாற்ற முட்டியவில்லை. சில வேளைகளில் அது அழுது விட்டுச் செல்லும் இன்னும் சில வேளைகளில் அது குட்டியிடம் தனது பாசையில் பேசிவிட்டுச் செல்லும் போது, குட்டிக்கு வாழைபழம் எறிந்து விட்டு செல்லும். இவற்றை எல்லாம் நாயும் அவதானித்து கொண்டு இருந்தது.
சிறிது காலத்திலேயே நாயும் கூட அவர்களுடன் பேச அரம்பித்தது. நாயும் குட்டியும் நண்பர்கள் ஆகின. ஒரு நாள் தாய்க்குரங்கு, நாயிற்க்கும் எங்கிருந்தோ எலும்புத் துண்டுகளை எடுத்து கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தது. நாயும் விருப்பமாக அந்த எலும்பு துண்டுகளை உண்ட வண்ணம் இருந்தது. வித்தைக்காரன் நாயிற்க்கு எலும்பு துண்டுகள் கொடுப்பது குறைவு.
குட்டி சில வேளைகளில் தனது தாயின் நினைவால் அழுதவண்ணம் இருக்கும்.. சில வேளைகளில் அது நாயிடம் தன்னை விடுவிக்க சொல்லி கிள்ளி விளையாடும். நாயும் தனது நன்றி. விசுவாசத்தை குரங்கிடம் காட்ட என எண்ணியது. ஒவ்வொரு நாளும் தாய் குரங்கும் தனது பிள்ளையின் விடுதலைக்காக அங்கே வந்து காத்திருந்து செல்லும். .
அன்று ஒரு நாள் வித்தைக்காரன் வெளியே எங்கோ சென்றிருந்தான். அன்றும் குட்டிக்குரங்கு தன்னை விடுவிக்கச்சொல்லி நாயிடம் கிள்ளி விளையாடியது. நாயும் வலைக் கூட்டின் கீழே ஓர் கிடங்கைத் தோண்ட தொடங்கியது. குட்டி புகுந்து பார்த்தது, அதனால் புக முடியவில்லை. மீண்டும் மீண்டும் தன்னை விடுவிக்கக் கோரியது. எனவே நாய் மீண்டும் அழமாக அந்த பள்ளத்தை தோண்டியது. இப்பொழுது குட்டி இலகுவாக புகுந்து வெளியே வர முடிந்தது. குட்டியும் சந்தோஷமாக வெளியே வர, நாயும் அதன் உடைகளையும் கழற்றி உதவியது. குட்டி குரங்கும் தன்னைத் தேடிக் காத்திருந்த தாயிடம் தாவி ஓடி சென்றது. குட்டியும் தாயும், நாயையும் தம்மோடு வரச் சொல்லி கேட்ட போது, அதற்கு அது தனது எஜமானிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறி மறுத்து விட்டது.
நாயும் சந்தோஷமாக அவற்றை வழி அனுப்பி வைத்தது. அதற்கு தனது எஜமானிற்கு துரோகம் செய்த எண்ணம் கொஞ்சமும் வரவில்லை ஏன் என்றால் தனது பசியைப் போக்கிய தாய் குரங்கிற்கு உதவிய நினைவே மேல் ஓங்கி இருந்தது.


