ஈர்ப்பு விசை பற்றி நீங்கள் அறியவேண்டிய சில விடயங்கள்
இயற்பியப் பொருட்களுக்கிடையே இயற்கையாக அமைந்திருக்கும் கவர்ச்சி விசையை ஈர்ப்பியல் விசை அல்லது ஈர்ப்பு விசை என்கின்றோம். ஒரு பொருளுக்கு எடையை வழங்குவதற்கும் அந்தப் பொருளானது கையில் இருந்து விடுபடும்போது கீழே விழுவதற்கும் ஈர்ப்பியல் விசை காரணியாகின்றது.
ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டன் போன்றோரின் ஆய்வுகள் மூலம் தெளிவாகிய ஈர்ப்பு விசை, புவி மற்றும் ஏனைய கோள்கள் சூரியனைச்சுற்றி ஒரு சுற்றுப்பாதையில் நிலைத்து தக்கவைக்கவும்; சந்திரன் பூமியை சுற்றி வருவதற்கும்; அலைகள் உருவாவதற்கும்; ஈர்ப்புமை மேற்காவுகை (Gravitational convection ) நிகழவும்; விண்மீன் உருவாக்கத்துக்கும், உருவாகும் விண்மீன்கள் மற்றும் கோள்களின் உள்ளே அதிக வெப்பம் உருவாகுவதற்கும்; மற்றும் பூமியில் காணப்படும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெறுவதற்கும் காரணியாக உள்ளது.
மேற்கூறியவை பொதுவாக அறிந்திருக்கும் விடயங்கள், கீழே உள்ள விடயங்கள் ஈர்ப்புமை பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்களாக இருக்கக்கூடும்:

- பொதுவான விசைகளுக்கு இருக்கும் இருபுறங்கள், அதாவது கவர்ந்திழுப்பது, தள்ளுவது ஈர்ப்பியல் விசைக்கு இல்லை. ஈர்ப்பு விசை கவர்ந்திழுக்க மட்டுமே செய்யும்; தள்ளும் தன்மை இவ்விசைக்கு இல்லை.
- இழுவைக் கற்றை (Tractor beam ) என்பது ஒரு பொருளை தொலைவில் இருக்கும் இன்னுமோர் பொருளுடன் கவர்ந்திழுக்கப் பயன்படக்கூடும் உபகரணம் ஆகும். இது செயன்முறையில் இன்னமும் சாத்தியமாகவில்லை. 1990களில் இருந்து இதற்கான ஆய்வு பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றது. இதனை ஒத்த உபகரணம் ஒன்று அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் உருவாக்கப்பட்டது. இது வளிமண்டலத்தில் உள்ள சிறிய துகள்களை 1.5 மீட்டர்கள் தூரத்தில் அசைக்கின்றது. இதற்கான ஆய்வில் நாசாவும் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- கேளிக்கைப் பூங்காவில் உள்ள உருள் வண்டியில் ( roller coaster ) சவாரி செய்வதும் அனைத்துல விண்வெளி நிலையத்தில் உலவுவதும் ஒரு விடயத்தில் ஒன்றாக உள்ளது: இரண்டிலும் உள்ள நபர்கள் நுண்ணீர்ப்புமையை (microgravity) எதிர்நோக்குகின்றனர். இந்நிலையில் எடைகுன்றிய நிலை அவர்களுக்கு ஏற்படுகின்றது.
- புவியில் 150 இறாத்தல் எடை உள்ள ஒருவர் வியாழன் கோளில் நிற்கின்றார் என்று வைத்துக்கொண்டால், அங்கெ அவரின் எடை 354 இறாத்தலாக இருக்கும். கோளின் திணிவு கூட அங்கே ஈர்ப்புமையும் அதிகரிக்கும்.
- விடுபடு திசைவேகம் (escape velocity) எனப்படுவது ஒரு பொருளானது கோளின் ஈர்ப்பு விசையினின்றும் விடுபட்டுச் செல்வதற்குக் கோளின் பரப்பில் அப்பொருளுக்கு அளிக்கப்படவேண்டிய மேல் நோக்கிய சிறுமத் திசைவேகம் ஆகும். புவியின் விடுபடு திசைவேகம் செக்கனுக்கு ஏழு மைல்களாகும் (அல்லது செக்கனுக்கு 11.2 கிலோமீட்டர்கள்). சந்திரனின் விடுபடு திசைவேகம் செக்கனுக்கு 2.4 கிலோமீட்டர்கள்.
- ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுவான அணுக்கரு விசை, வலுக்குன்றிய அணுக்கரு விசை (அணுவின் கதிரியச் சிதைவுக்கு காரணமானது) ஆகியன இயற்கையின் நான்கு அடிப்படை விசைகள் ஆகும். இவற்றுள் மிகவும் வலிமை குறைந்தது ஈர்ப்பியல் விசையேயாகும்.
- குளிர் சாதனப் பெட்டியில் ஒட்டியிருக்கும் ஒரு சிறிய நாணயக் குற்றியின் அளவுள்ள காந்தம் ஒன்று உருவாக்கும் மின்காந்த விசையானது புவியீர்ப்பு விசையைக் காட்டிலும் வலுக்கூடியது.
- ஈர்ப்பு விசை அனைத்துப் பொருட்களையும் ஒரேயளவான வீதத்திலேயே ஆர்முடுக வைக்கின்றது. இதில் பொருளின் எடை தங்கியிருக்கவில்லை. ஒரே அளவைக்கொண்ட ஆனால் வெவ்வேறு எடைகளைக் கொண்ட பந்துகளை ஒரேநேரத்தில் உங்கள் வீட்டுக் கூரையில் இருந்து கீழே விழவிட்டீர்கள் எனின் அவை யாவும் ஒரே நேரத்திலேயே நிலத்தை வந்தடையும்.
- திணிவைக் கொண்ட எந்தவொரு பொருளும் தன்னைச் சூழ்ந்துள்ள வெளி-நேரத்தை (space-time) நெளிவளைவுக்கு (warp) உட்படுத்தும். 2011இல் நாசாவின் கிராவிட்டி புரோப் பி (Gravity Probe B) எனும் செய்மதி வெளிநேர வளைவை அளக்க அனுப்பப்பட்டது. இவ்வாய்வின் பெறுபேறுகளில் இருந்து புவியானது பேரண்டத்தில் சர்க்கரைப்பாணியில் மரத்தாலான பந்து ஒன்று உருண்டு கொண்டிருப்பதைப்போல அமைந்துள்ளது தெரியவந்தது. இது ஐன்ஸ்டீனின் கூற்றை உறுதிப்படுத்தியது. (படத்தைப் பார்க்க)


