நலநுண்ணுயிரிகள் அல்லது புரோபயாடிக்குகள் (Probiotics) என்பவை உட்கொள்ளும்போது பெரும்பாலும் ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் உயிர்வாழ் நுண்ணுயிரிகள் ஆகும். இவை தயிர் (யோகர்டு), அமிலப்பால், கெஃபிர் போன்ற பால் மூல உற்பத்திப்பொருள்களில் இருந்தும் மாத்திரைகளாகவும் கிடைக்கின்றன.
உயிருள்ள நுண்ணுயிரிகள், போதுமான அளவில் உட்கொள்ளப்படும்போது, அவற்றை உட்கொள்ளும் உயிருக்கு ஆரோக்கிய நன்மையை அளித்தால் அவை புரோபயாடிக்குகள் எனப்படும் என்று உலக சுகாதார அமைப்பு வரையறுக்கின்றது.
இயல்பாகவே மனிதர் உட்பட முள்ளந்தண்டுடைய விலங்குகள் மற்றும் பூச்சி இனங்களில் நன்மை தரும் பாக்டீரியாக்கள், ஆர்க்கீயாக்கள் உயிர்வாழ்கின்றன. இவை குடல், தோல் போன்ற பகுதிகளில் குழுமங்களாக வாழ்கின்றன. இவை நுண்ணுயிர்க்குவை (microbiota அல்லது microbiome) என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான நுண்ணுயிர்க்குவை நுண்ணுயிரிகள் பெருங்குடலில் காணப்படுகின்றன.
நுண்ணுயிர்க்குவை நுண்ணுயிரிகள் உயிர்ச்சத்து K உயிர்ச்சத்து B வகைகள் (B12, ஃபோலிக் அமிலம்) உட்பட சில உயிர்ச்சத்துக்களை உற்பத்தி செய்கின்றன. நார்ப் பொருட்களை ப்யூட்ரேட், புரோபியோனேட் மற்றும் அசிடேட் போன்ற குறுகிய சங்கிலி கொழுப்புகளாக மாற்றுகிறன, இது குடற் சுவருக்கு உணவளிக்கிறது மற்றும் பல வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை செய்கிறது. இந்தக் கொழுப்புகள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறன, குடல் சுவரைப் பலப்படுத்துகிறன. இது தேவையற்ற பொருட்கள் உடலுக்குள் நுழைவதைத் தடுக்கவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டவும் உதவும்.
நுண்ணுயிர்க்குவையில் நன்மை தரும் நுண்ணுயிரிகள் தவிர கேடு விளைவிக்கும் நுண்ணுயிரிகளும் உயிர்வாழ்கின்றன. சில காரணிகளால் நன்மை பயக்கும் குடல் நுண்ணுயிர்க்குவைகள் குறைந்துபோகும் போது தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்க்குவை நுண்ணுயிரிகளின் ஆதிக்கம் வலுப்பெறுகின்றது. இதன்போது நலநுண்ணுயிரிகள் உட்கொள்ளுவது அவசியமானதாக அமைகின்றது.
நலநுண்ணுயிரிகள் உட்கொள்ளுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஆய்வுகள் இற்றைவரைக்கும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எடுத்துக்காட்டாக, அழல் குடல் கூட்டறிகுறிக்கு (Irritable bowel syndrome) இவை சிறந்ததொரு தீர்வு என்று கருதினாலும் அறிவியலாளர்களால் இன்னமும் இவற்றின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகின்றன.
நலநுண்ணுயிரிகள் விற்பனையில் இரையகக் குடலிய அசௌகரியத்தை குறைத்தல், நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் என்று பல நன்மைகள் பட்டியலிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அறிவியல் சான்றுகளால் இன்னமும் ஆதரிக்கப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகை நலநுண்ணுயிரிகள் அடங்கிய வியாபாரப் பொருள் ஏமாற்று விளம்பரப் பொருள் என்று சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
வரலாறு
பாலாடைக்கட்டிகளும் புளிக்கவைக்கப்பட்ட பாலும் (நொதித்த பால்) தொன்றுதொட்டு பலநாட்டவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பால் உணவுகளை நொதிக்கவைத்தல் உணவுப் பாதுகாப்பிற்கான பழமையான நுட்பங்களில் ஒன்றாகும்.

புரோபயாடிக்குகள் பற்றிய இன்றைய கருதுகோள் ரஷ்ய விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவருமான இலியா இலிச் மெச்னிகோவ் ( Илья́ Ильи́ч Ме́чников) என்பவரால் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, அவர் 1907 இல் குடல் நுண்ணுயிர்க்குவையை மாற்றியமைக்க முடியும் என்றும், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை பயனுள்ள நுண்ணுயிரிகளுடன் மாற்றீடு செய்யவும் முடியும் என்றும் பரிந்துரைத்தார்.
மெச்னிகோவ் பாரிஸில் உள்ள பாஸ்டர் இன்ஸ்டிட்யூட்டில் பேராசிரியராக இருந்தபோது, பெருங்குடலில் நச்சுப் பொருட்களை புரதச்சிதைப்பு மூலம் உருவாக்கும் அழுகவைக்கும் (putrefactive) நுண்ணுயிரிகளின் செயல்பாட்டின் விளைவாக முதுமையடையும் செயல்முறை விளைகிறது என்ற கருதுகோளை முன்மொழிந்தார். சாதாரண நுண்ணுயிர்க்குவையின் ஒரு பகுதியாக இருக்கும் குளோஸ்ட்ரிடியா போன்ற புரதச்சிதைப்பு பாக்டீரியாக்களால் புரதங்களின் செரிமானத்திலிருந்து பீனால்கள், இண்டால்கள் மற்றும் அம்மோனியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் உருவாகின்றன. மெச்னிகோவின் கூற்றுப்படி, இந்த கலவைகள் “குடல் தன்னுடல் நச்சுத்தன்மை” எனும் நிலைக்குக் காரணமாக இருந்தன, இது முதுமையுடன் தொடர்புடைய உடல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறினார். (Мечников, 1910)
அக்காலத்தில், குறைந்த pH காரணமாக, இலக்டிக் அமில பாக்டீரியா மூலம் புளிக்கவைக்கப்பட்ட பால் புரதச்சிதைப்பு பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுப்பதாக அறியப்பட்டது. உதாரணமாக பல்கேரியா மற்றும் ரஷ்ய ஸ்டெப்பி புல்வெளிகளில், இலக்டிக் அமில பாக்டீரியாவால் காய்ச்சப்பட்ட பாலை அருந்தி வாழ்ந்தவர்கள் பெரும்பாலானோர் வழமைக்கு மாறாக நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதையும் மெச்னிகோவ் கவனித்தார். இந்த அவதானிப்புகளின் அடிப்படையில், மெச்னிகோவ் புளித்த பாலை உட்கொள்வது குடலில் பாதிப்பில்லாத இலக்டிக் அமில பாக்டீரியாக்களை “விதைக்கும்” செயன்முறைக்கு வழிகோலும் என்றும் குடல் pH ஐக் குறைக்கும் என்றும், மேலும் இது புரதச்சிதைப்பு பாக்டீரியாவின் வளர்ச்சியை அடக்கும் என்றும் முன்மொழிந்தார். மெச்னிகோவ் தானே தனது உணவில் புளிப்பு பாலை அறிமுகப்படுத்தினார், அவர் “பல்கேரியன் பசிலஸ்” என்று அழைக்கப்படும் பாக்டீரியாவுடன் புளிக்கவைத்தார்; அவரது உடல்நலம் பயனடைகிறது என்று நம்பினார். பாரிசில் உள்ள அவரது நண்பர்கள் விரைவில் அவரது முன்மாதிரியைப் பின்பற்றினர். மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு புளிப்பு பால் உணவை பரிந்துரைக்கத் தொடங்கினர்.
நலநுண்ணுயிரி வகைகள்
பல வகையான பாக்டீரியாக்கள் நலநுண்ணுயிரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. அவை அனைத்தும் வெவ்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளன, ஆனால் பெரும்பாலானவை இரண்டு குழுக்களிடமிருந்து வந்தவை. உங்களுக்கு எது சிறப்பாக உதவக்கூடும் என்பதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
இன்று பயன்படுத்தப்படும் சில நலநுண்ணுயிரிகளின் பேரினங்கள்:
- இலக்டோபசிலசு (Lactobacillus): இது மிகவும் பொதுவான புரோபயாடிக். தயிர் மற்றும் பிற புளித்த உணவுகளில் காணலாம். இவற்றின் வெவ்வேறு திரிபுகள் (இனங்கள்) வயிற்றுப்போக்கிற்கும் பாலில் உள்ள சர்க்கரையான இலக்டோசை செரிமானம் செய்ய முடியாதவர்களுக்கும் உதவலாம்.
- பிஃபிடோபாக்டீரியம் (Bifidobacterium): சில பால் பொருட்களில் இதைக் காணலாம். இது அழல் குடல் கூட்டறிகுறிக்கும் (IBS) மற்றும் வேறு சில நிலைமைகளின் அறிகுறிகளை எளிதாக்கவும் உதவும்.
இவை தவிர Saccharomyces boulardii போன்ற சில மதுவ வகைகள் (yeast) வயிற்றுப்போக்கு மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறன.
புரோபயாடிக்குகளின் மிகவும் பொதுவான இனங்கள்:
Lactobacillus acidophilus
Lactobacillus bulgaricus
Lactobacillus casei
Lactobacillus gasseri
Lactobacillus plantarum
Bifidobacterium bifidum
Bifidobacterium lactis
Bifidobacterium longum
Enterococcus faecium
Saccharomyces boulardii
பிஃபிடஸ் ரெகுலாரிஸ் (Bifidus regularis), சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக Dannon நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பெயர், பிஃபிடோபாக்டீரியம் அனிமல்லிஸ் டிஎன்-173 010 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நலநுண்ணுயிரிகள் டேனனின் பிரபலமான ஆக்டிவியா (Activia) தயாரிப்புகளில் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு தயிர் புரோபயாடிக் என்று கருதப்படுவதற்கு, அது மேலே பட்டியலிடப்பட்டுள்ள இனங்களில் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நலநுண்ணுயிரி உணவு
உயிர்வாழ் நலநுண்ணுயிரிகள் புளித்த பால் பொருட்கள், பிற புளித்த உணவுகள் மற்றும் நலநுண்ணுயிரிகள் வலுவூட்டப்பட்ட உணவுகள் மூலம் கிடைக்கின்றது.

இலக்டிக் அமில பாக்டீரியாவை (LAB) கொண்டிருக்கும் சில புளிக்கவைக்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு:
• சில தயிர் வகைகள், குறிப்பாக வெற்று கிரேக்க தயிர்
• கெஃபிர் (kefir)
• நொதிக்கவைத்த காய்கறிகள்
• Sauerkraut
• Tempeh
• Kimchi
பயன்பாடும் பக்கவிளைவும்
- அழல் குடல் கூட்டறிகுறிக்குறி (Irritable bowel syndrome)
- குடல் அழற்சி நோய் (Inflammatory bowel disease)
- தொற்று வயிற்றுப்போக்கு அல்லது தொற்றுப் பேதி (வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது)
- நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் ஏற்படும் வயிற்றுப்போக்கு
வயது செல்லச் செல்ல நன்மை அளிக்கும் நுண்ணுயிர்க்குவையின் எண்ணிக்கை குறைந்து கேடு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் எண்ணிக்கை கூடுகின்றது. எனவே நலநுண்ணுயிரிகள் முதியோர்களுக்குக் கொடுப்பது சிறந்தது என்று கருதப்படுகின்றது.
உடலின் மற்ற பகுதிகளில் உள்ள பிரச்சனைகளுக்கு அவை பயனுள்ளதாக இருப்பதைக் காட்டும் சில ஆராய்ச்சிகளும் உள்ளன. அவையாவன:
- தோலழற்சி
- சிறுநீர் மற்றும் யோனி ஆரோக்கியம் தொடர்புடைய நோய்கள்
- ஒவ்வாமை
- சளி
நலநுண்ணுயிரிகளை எடுத்துக்கொள்வது உங்களுக்கு நல்லதா என்று உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள். பொதுவாக, நலநுண்ணுயிரி உணவுகள் மற்றும் மாத்திரைகள் பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானவை என்று கருதப்படுகிறது, இருப்பினும் நோயெதிர்ப்பு பிரச்சினைகள் அல்லது பிற தீவிர சுகாதார நிலைமைகள் உள்ளோர் அல்லது புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருவோர் அவற்றை மருத்துவர் அனுமதி இன்றி எடுத்துக் கொள்ளக்கூடாது.
புரோபயாடிக் பாக்டீரியாக்கள் உணவுக் கூறுகள் அல்லது உயிரியல் சுரப்புகளை நுகர்வோருக்குத் தீங்கு விளைவிக்கும் இரண்டாம் நிலைப் பொருட்களாக மாற்றலாம். இலக்டோபசிலசு மற்றும் பிஃபிடோபாக்டீரியா மூலம் உணவுப் புரதங்களின் செரிமானத்தின் போது அமின்களின் உற்பத்தி நலநுண்ணுயிரிகளின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை மதிப்பிடுவதற்கான ஒரு சோதனையாக முன்மொழியப்பட்டது. (W. Kneifel, K.J. Domig, 2014)
சில சந்தர்ப்பங்களில், இலேசான பக்கவிளைவுகளாக வயிற்றுப்போக்கு, வயிற்றுப்போக்கு, வாயு மற்றும் வயிற்று உப்புசம் ஆகியவை நீங்கள் எடுக்கத் தொடங்கிய முதல் இரண்டு நாட்களுக்கு இருக்கலாம். அவை ஒவ்வாமை எதிர்வினைகளையும் தூண்டலாம். நலநுண்ணுயிரிகளை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
ஆய்வுகள்
- பால் ஒவ்வாமை: பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க புரோபயாடிக்குகள் உதவியாக இருக்கும் என்பதைக் குறிக்க வரையறுக்கப்பட்ட, குறைந்த சான்றுகள் மட்டுமே உள்ளன. ஒவ்வாமைத் தோலழற்சி உள்ள குழந்தைகளுக்கு நேரடியாக வழங்கப்படும் புரோபயாடிக்குகள் அல்லது கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் நலநுண்ணுயிரிகளைப் பயன்படுத்திய தாய்மார்களின் குழந்தைகளுக்கு ஒவ்வாமைத் தோலழற்சியின் ஆபத்து குறைவு என்பதற்கான குறைந்த சான்றுகளை 2015 ஆம் ஆண்டின் மதிப்பாய்வு ஒன்று காட்டியது.
- ஆஸ்துமா: ஆராய்ச்சி சான்றுகளின் தரம் குறைவாக இருப்பதால், குழந்தை பருவ ஆஸ்துமாவுக்கு புரோபயாடிக் உதவுமா என்பது தெளிவாக இல்லை.
- ஆண்டிபயாடிக் தொடர்புடைய வயிற்றுப்போக்கு: புரோபயாடிக் சிகிச்சையானது நிகழ்வு மற்றும் தீவிரத்தைக் குறைக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- யோனி பக்டீரியப்பெருக்கம் (Bacterial vaginosis): யோனி பக்டீரியப்பெருக்கம் HIV தொற்றைப் பெறுதல் மற்றும் பாதகமான கர்ப்ப விளைவுகளுடன் தொடர்புடையது. (van de Wijgert, J.H.H.M., Verwijs, M.C., Agaba, S.K., 2020) யோனி பக்டீரியப்பெருக்கத்தின் புரோபயாடிக் சிகிச்சை என்பது பாக்டீரியா வஜினோசிஸை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் தொற்றுநோயைக் குணப்படுத்த ஆரோக்கியமான யோனியில் இயல்பாகக் காணப்படும் பாக்டீரியா இனங்களை உட்கொள்ளல் அல்லது உட்செலுத்துதல் ஆகும்.
- உயர் குருதி அழுத்தம்: உயர் குருதி அழுத்தத்தின் நோய் உருவாக்கத்தில் குடல் நுண்ணுயிரிகள் முக்கிய பங்கு வகிக்கிறன என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. (Ellen G. Avery, Hendrik Bartolomaeus, Andras Maifeld, Lajos Marko, 2021) எனினும் தெளிவுபடுத்த மேலதிக ஆய்வுகள் தேவையானதாக இருக்கின்றது.
- கொலஸ்ட்ரால்: 2000 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்றில் நலநுண்ணுயிரிகள் அடங்கிய யோகர்ட் மொத்த கொலஸ்ட்ராலை நான்கு விழுக்காடுகள் அளவில் குறைக்கின்றது என்றும் கெட்ட கொழுப்பு எனப் பொதுவாக அழைக்கப்படும் குறைசெறிவு கொழுப்புப் புரதத்தின் (LDL) அளவை ஐந்து விழுக்காடுகள் அளவில் குறைக்கின்றது என்றும் அறிந்தனர். (L Agerholm-Larsen, ML Bell, GK Grunwald & A Astrup, 2000)
- மனச்சோர்வு: 2019 ஆம் ஆண்டு ஆய்வொன்றில் நலநுண்ணுயிரிகள் சிறிதளவில் மனச்சோர்வைக் குறைக்கின்றது என்று அறியப்பட்டது.
- வயிற்றுப்போக்கு: சில நலநுண்ணுயிரிகள் பல்வேறு வகையான சிறார்களில் ஏற்படும் இரைப்பை குடல் அழற்சிக்கு சாத்தியமான சிகிச்சையாக பரிந்துரைக்கலாம் என்று தெரிவிக்கின்றது. (Caleb K. King, M.D, 2003)
- Helicobacter pylori: இலக்டிக் அமில பாக்டீரியாவின் (LAB) சில இனங்கள் ஹெலிகோபாக்டர் பைலோரி நோய்த்தொற்றுகளை (பெப்டிக் அல்சரை உருவாக்கும் பக்டீரியா) நிலையான மருத்துவ சிகிச்சையுடன் இணைந்து பயன்படுத்தும்போது குணமாக்கலாம் என்று அறியப்பட்டது. (J.M.THamilton-Miller, 2003)
- நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் தொற்று: இலக்டிக் அமில பாக்டீரியாவின் (LAB) சில இனங்கள் நோய் உருவாக்கும் பக்டீரியக்களுடன் போட்டி போட்டு அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன.
- அறிதிறச் செயல் (cognitive function): நலநுண்ணுயிரிகள் உட்கொள்ளல் குடல் நுண்ணுயிர்க்குவையில் ஏற்படும் மாற்றங்களுடன் அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது என ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. (Jessica Eastwood GemmaWalton, 2021)
பிரிபயாடிக்குகள்
பிரிபயாடிக்குகள் (prebiotics) என்பவை பொதுவாக செரிக்க முடியாத நார்ப்பொருள் உணவுக் கூறுகளாகும், அவை நலநுண்ணுயிரிகளின் அல்லது குடல் நுண்ணுயிர்க்குவைகளின் வளர்ச்சி அல்லது செயல்பாட்டைத் தேர்ந்தெடுத்துத் தூண்டுகின்றன.
நலநுண்ணுயிரிகள், பிரிபயாடிக்குகள் இரண்டும் சேர்ந்த கலவை சின்பயோடிக் (synbiotic) என அழைக்கப்படுகின்றது.
மேற்கோள்கள்
Caleb K. King, M.D. (2003). Managing Acute Gastroenteritis Among Children. Retrieved from cdc: https://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/rr5216a1.htm
Ellen G. Avery, Hendrik Bartolomaeus, Andras Maifeld, Lajos Marko. (2021, ஏப்ரல் 1). The Gut Microbiome in Hypertension. Retrieved from ahajournals: https://www.ahajournals.org/doi/10.1161/CIRCRESAHA.121.318065
J.M.THamilton-Miller. (2003). The role of probiotics in the treatment and prevention of Helicobacter pylori infection. International Journal of Antimicrobial Agents, 360-366. doi:https://doi.org/10.1016/S0924-8579(03)00153-5
Jessica Eastwood GemmaWalton. (2021, September). The effect of probiotics on cognitive function across the human lifespan: A systematic review. Neuroscience & Biobehavioral Reviews, 311-327. doi:https://doi.org/10.1016/j.neubiorev.2021.06.032
L Agerholm-Larsen, ML Bell, GK Grunwald & A Astrup. (2000). The effect of a probiotic milk product on plasma cholesterol: a meta-analysis of short-term intervention studies. Retrieved from Nature: https://www.nature.com/articles/1601104
van de Wijgert, J.H.H.M., Verwijs, M.C., Agaba, S.K. (2020). Vaginal Probiotic or Metronidazole Use to Prevent Bacterial Vaginosis Recurrence. Retrieved from Nature: https://www.nature.com/articles/s41598-020-60671-6
W. Kneifel, K.J. Domig. (2014). Probiotic Bacteria. Retrieved from Science Direct: https://www.sciencedirect.com/topics/food-science/probiotic-bacteria
Мечников, И. И. (1910). Arteriosclerosis and intestinal poisons. JAMA, 55:2311–12.


