Me • Learning • Entertainment • News

ஓரை பார்த்து வாழுங்கள்

ஓரை பார்த்து வாழுங்கள்

சாத்திரம் என்பது எல்லோராலும் ஏற்று கொள்ளப்படுவதில்லை அத்துடன் அவை எல்லோராலும் நடைமுறை படுத்துவதும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே ஆர்வமாக சாத்திரத்தை கணிக்கின்றனர், ஏற்றுகொள்கின்றனர். இன்னும் சிலர் தேடல்கள்  ஏற்படும் வேளை மட்டும் தேடுகின்றனர். எனினும் யதார்த்த ரீதியாக அராய்ந்தால், சாத்திரம் பொய் பேசுவதில்லை. சாத்திரத்திலும் பல உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றது.

நல்ல காரியங்கள் செய்யும் போது “நல்ல நேரம்” என எம்முன்னோர் எதற்காக கணிக்கத் தொடங்கினார்கள்? நல்லவை சிறப்பாக, நன்மையாக நடைபெற வேண்டுமென்றால் நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்று தானே.. தவிர்க்க முடியாமல் நல்ல நாள் பார்க்காமல் ஒரு காரியம் செய்யும் பொழுது:

“நாள் என் செய்யும் வினை தான் என் செய்யும்
எனை நாடி வந்தகோள் என் செயும் கொடும்
கூற்று என் செயும் குமரேசன் இரு தாளும்
சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”

என்கிற கந்தர் அலங்கார வரிகளை கூறி நாமே நமக்குள் சமாளித்தாலும் வினை, விதி என்பவையால் தான் நடப்பவை எல்லாம் தீர்மானம் பெறுகிறது. அவற்றை ஒழுங்காக வழி நடத்த நல்ல நேரங்கள் பார்க்கத்தான் வேண்டி உள்ளது.

பழைய காலத்தில், மன்னர்கள்  நல்ல நேரம் பார்த்து தான் போர் புரிய  செல்வார்களாம். அப்பொழுது ஓரை பார்த்து தான் நல்ல நேரம் கணிக்கப்பட்டிருகிறது. ஆங்கிலேயர்கள் நம்மிடம் இருந்து தான் இந்த ஓரை எனும் சொல்லை கடன் வாங்கி “hour” என்று கணிக்கதொடங்கினர் போலும்.

ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து வரும் நேரப் பிரகாரம் தான்  கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களும் ஒரு நாளில் மாறி மாறி அந்த நாளை ஆட்சிசெய்கின்றன. உதாரணமாக, இன்று திங்கட்கிழமை எனின் ஆறு  மணியில் இருந்து ஏழு மணி வரை திங்கள் ஒரையாகவும், பின்னால் ஏழு மணி தொடக்கம் எட்டு மணி வரை ஞாயிறு ஓரையாகவும், எட்டில் இருந்து ஒன்பது மணி வரை சனி ஓரை யாகவும், ஒவ்வொரு மணித்  துளிகளும் கிழமைகளின் பின் நோக்கி கணிக்கப்படுகிறது. ராகுவும்  கேதுவும்  சாயா கிரகங்கள் என்பதால் அவற்றிற்க்கு ஓரை இல்லை.

புதன், சுக்கிரன், குரு (வியாழன்), வளர்பிறை சந்திரன் ஆகிய நான்கு கிரக ஓரைகளும் நல்ல ஒரைகளாகும். எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்றாலும் இந்த ஓரைகளில் தொடங்கலாம். ஒரு நாளில் நான்கு முறை அந்த நாளின் ஓரை வரும். காலை ஆறுமணி, மதியம் ஒரு மணி, முன் இரவு எட்டு மணி , அதி காலை மூன்று மணி என்று அந்த நாளின் ஓரைகள் வந்து போகும்.

தொடர்ந்து எவை எவை நல்ல கிரக ஓரைகள் என்றும், என்ன என்ன செய்யலாம் என்று பார்க்கும் பொழுது:  .

புதன் ஓரை

புதன் கல்விக்கு அதிபதியான கிரகம் என்பதால், புதன் ஓரையில் கல்வி சம்பந்தமான வேலைகளை தொடங்குவதற்கு ஏற்ற நேரமாக உள்ளது. குழந்தைகளிற்கு புதிய பாடங்கள் தொடங்குவது எனில் புதன் கிழமைகளில் புதன் ஓரையில் தொடங்கினால், அதனால் குழந்தை இடர் இன்றி தனது கல்வியைத் தொடரும்.

சந்திர ஓரை

சந்திரனை திங்கள் என்று சொல்வதுண்டு, அது வளர்வதும் தேய்வதுமான கிரகம் ஆகும். பொதுவாக நல்ல காரியங்கள் செய்யும்போது வளர்பிறை பார்த்து செய்யவேண்டும். அப்பொழுது தான் எடுத்த காரியமும் வளர்ந்து சிறக்கும். அமாவாசைக்கு பின்னர் வரும்சந்திரன் வளர் பிறை சந்திரன் ஆகும். இந்த ஓரை காலத்தில் எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். திங்கள் ஒரு பெண் என்பதால் பெண்கள் தொடர்புடைய காரியங்களை செய்யலாம். உதாரணமாக பெண் பார்க்கச் செல்வது, சீமந்தம், காது குத்தல் போன்ற பெண்மை சம்பந்தமான காரியங்கள் செய்வது சாலச் சிறந்தது ஆகும்.

குரு ஓரை :

குரு என்பது வியாழன் கிரகம் ஆகும். எல்லா வகை சுப காரியங்களிற்கும் ஏற்றது. ஆடை அபரணங்கள் புதிதாக அணிவது, வாங்குவது என்பது வியாழக் கிழமைகளில் மிகவும் சிறப்பானது. ஆனால் பணக்கொடுக்கல் வாங்கல் மட்டும் செய்துவிடக்கூடாது. பிரச்சனையில் தான் முடியும். அதிலும் நகை அடைவு வைப்பது எனின் மீண்டும் நகையை   மீட்கவே முடியாமல் செய்துவிடும்.

சுக்கிர ஓரை :

சுக்கிரன் என்பது வெள்ளி கிரகம் ஆகும். வெள்ளி இலக்குமி கடாட்சமானது. வெள்ளி ஒரையின் பொழுது பணம் வீட்டிற்கு வருவது சிறந்தது ஆனால் வீட்டில் இருந்து போவது கூடாது. புது ஆடைஅணி வாங்கலாம், அணியலாம். ஆனால் யாரிற்கும் கை மாற்றாக பணம் கொடுப்பது கூடாது.

சனி ஓரை:

சனி வினை, விதி சம்பந்தமான ஒரு கிரகம் என்பதால் பூர்வ ஜென்ம பாவங்கள் தீர்ப்பது, அடைக்க முடியாத கடன் அடைக்க என  இந்த சனி ஓரையை பயன் படுத்தலாம். கடனை வாங்கிவிட்டு அடைக்க முடியாமல் உள்ளவர்கள் சனிக்கிழமை வரும்  சனி ஓரையில் ஓர் சிறு தொகையை கொடுத்து விட்டால் தானாகவே அவரது கடன் அடைபட தொடங்கி விடும். மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழ்நிலை வராது. சனி ஓரையில் பிரச்சனை என்று வந்தால் அது பூதாகரமாக வெடிக்கும். கணவன் மனைவி பிரச்சனை, குடும்ப உறவு  பிரச்சனை, சகோதர பிரச்சனை  எல்லாம்சனி ஓரையில் தொடங்கினால் மீண்டும் முடித்து வைக்க கஷ்டமாக இருக்கும். சனிக்கிழமைகளில் வரும் செய்வாய்  ஓரையோ அல்லது செவ்வாய்  கிழமைகளில் வரும் சனி ஓரையோ வாக்குவாதம் தொடங்கினால் பெருத்த சண்டை ஆகிவிடும். ஆகவே இந்த ஓரைகளில் தர்க்கங்களை தவிக்க வேண்டும். நாம் அவதானித்து பார்த்தோமானால், சனி ஓரைகளில் தான் தானாகவே வீட்டில் பிரச்சனைகள் தலை தூக்கும்.         

செவ்வாய் ஓரை

செவ்வாய் ஓர் யுத்த காரக கிரகம். அந்த நாளில்  நல்ல காரியம் செய்ய நினைக்க  கூடாது. ஆயுத சம்பந்தமான வேலைகளை துவங்கலாம்.. அதாவது, போர் செய்ய உகந்த நாளாக கணிக்கப் படுகிறது. எதாவது ஒரு பிரச்சனை, அல்லது வாக்குவாதங்கள் வந்தால், கவனித்து பார்த்தோமானால், அது சனி ஓரை ஆகவோ அல்லது செவ்வாய் ஒரை யகவோ தான் இருக்கும்.  

சூரிய ஓரை

சூரியன் ஒரு ராஜ கிரகம் ஆகும். எனினும் சூரிய ஓரையும் நல்ல காரியங்கள் செய்ய உகந்தது இல்லை. சூரியன் தந்தை கிரகம் என்பதால் பெரியவர்களை வணங்கவோ, ஆசீர்வாதம் பெறவோ செல்வது எனின் சூரிய ஒரையை பயன் படுத்தலாம். ராஜ கிரகம் என்பதால் அரச சம்பந்தமான காரியங்கள் செய்வதற்கு உகந்ததாக இருக்கும்.

இவ்வாறு ஓரை பார்த்து வாழ்ந்தால், வெற்றி நம்மை தேடி வரும் என்பது சித்தர் வார்த்தைகள் ஆகும்.

Share:

More Posts

Send Us A Message