நீ வந்தால்
என்னிடத்தில் ஒரு நடுக்கம்,
உன்னைத்தவிர வேறு எவரையும் நினைக்கக்கூட
முடிவதில்லை,
என் உள்ளத்து ஆசைகளைக் கூடக் கொல்கிறாய்,
மாந்தர்களுடன் சினம் கொள்ளச் செய்கிறாய்,
மானமுள்ள மனிதனா நான் என்று
என்னைக் கேட்க வைக்கின்றாய்,
என்னுடன் நானே போராடும் சம்பவம்
உன்னால்தானே அரங்கேறியது,
நீ வந்தால்
என் வயிற்றினில் ஏதோ ஒரு குழப்பம்,
கண்களில் ஏதோ மயக்கம்,
வீதியில் நடமாட என்னை நீ விடுவதில்லை,
தள்ளாடும் என் நிலையை உருவாக்கியது நீதானே,
உன்னால் தானே ஊரவர் பலர்
சண்டையிட்டு மடிந்தனர்,
உனக்காகத் தானே உலகமே உருள்கிறது,
நீ வந்தால்
என் நாவிற்கொரு ஏக்கம்,
என் உயிருக்கும் கூட வாட்டம்,
பத்து நாள் கூடி இருந்தால்
உயிரையே போக்கும் நீ
முதலாளித்துவ வர்க்கத்துடன்
ஏன் சேர்வதில்லை?
ஏழைகள்மீது அளவற்ற பாசமா?
நீ வந்தால்
பத்தும் பறந்திடச் செய்திடுவாய்,
எங்கிருந்தோ உண்டி வாசம் வந்திடின்,
தண்டித்து மேலும் எம்மை வாட்டுவாய்,
நல் சுவை உணவுண்டால்
தறிகெட்டு என்னை விட்டு ஓடிடுவாய்…
பசி என்னும் அரக்கனே…


